சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் விழா; ரஜினி, கமல் உட்பட திரை உலக பிரபலங்கள் பங்கேற்பு.
இசையமைப்பாளர் இளையராஜா தனது 50 ஆண்டுகால இசைப் பயணத்தை சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த விழா நடைபெறுகிறது. இளையராஜா, மேற்கத்திய மற்றும் கர்நாடக இசை கலந்த ‘வேலியண்ட்’ சிம்பொனி நிகழ்ச்சியை கடந்த மார்ச் மாதம் லண்டனில் அரங்கேற்றியதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் இவ்விழாவை அறிவித்திருந்தார்.
இந்த பாராட்டு விழாவில் மூத்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் பங்கேற்கின்றனர். மேலும் வெளிநாட்டு இசைக் கலைஞர்கள் சிறப்பு இசைக் கச்சேரி நிகழ்த்தவுள்ளனர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி திரையுலக பிரபலங்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.














