சீனாவின் இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா, மூன்றே மாதத்தில் 10000 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில், அலிபாபா நிறுவனம், தனது வருவாயில் 50 சதவீத இழப்பு நேரிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தது. இது நிறுவனத்திற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. அதன் பின்னர், தற்போது, பணி நீக்கம் குறித்த செய்திகள் வெளிவந்துள்ளது நிறுவனத்தின் மதிப்பை மேலும் குறைத்துள்ளது. அலிபாபா நிறுவனத்தின் வருவாய், கடந்த ஜூன் மாதத்தில் 22.74 பில்லியன் யுவானாக இருந்தது. இதுவே கடந்த 2021 ஜுன் மாதத்தில், 45.14 பில்லியன் யுவானாக இருந்தது. நாட்டின் பொருளாதாரச் சரிவு மற்றும் விற்பனையில் ஏற்பட்டுள்ள மந்தத்தன்மை போன்றவற்றால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், செலவுகளைக் குறைக்கும் பொருட்டு, ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 9241 அலிபாபா பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, தற்போது நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 245700 ஆக உள்ளது. ஒரு காலத்தில் இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் கொடிகட்டி பறந்தது. பெருமளவிலான முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தனர். அதன் பின்னர், சீன அரசு தனியார் நிறுவனங்களுக்கு அதிக கெடுபிடிகள் விதித்த போது, அலிபாபா நிறுவனத்திற்குச் சுமார் 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் அந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆன்ட் நிறுவனம் பொது பங்கீட்டிற்கு வருவதும் தடைப்பட்டது. இதனால் அலிபாபா நிறுவனம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. தற்போது ஹாங்காங் பங்குச்சந்தையில் அலிபாபா நிறுவனத்தின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. எனவே, நிறுவனம் மீண்டும் எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.