கிரெடிட் சூயஸ் வங்கியின் சுவசர்லாந்து பிரிவை முழுவதுமாக கையகப்படுத்த உள்ளதாக யுபிஎஸ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த இணைப்பு நடவடிக்கை காரணமாக, சுவிட்சர்லாந்தில் 3000 பேர் வேலை இழக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
வரும் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள், இரு வங்கிகளின் இணைப்பு முழுமை அடையும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த இணைப்பை முன்னுறுத்தி, 10 பில்லியன் டாலர் அளவில் செலவுகளை குறைக்கும் திட்டத்திலும் யுபிஎஸ் வங்கி ஈடுபட உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், கிரெடிட் சூயஸ் வங்கியை கையகப்படுத்திய பிறகு, யுபிஎஸ் மேற்கொள்ளும் மிகப்பெரிய செலவுகள் குறைக்கும் நடவடிக்கையாக இது சொல்லப்பட்டுள்ளது. இதனால், அடுத்த இரு ஆண்டுகளில், சுவிட்சர்லாந்தில் பணிபுரியும் 3000 பேர் தங்கள் வேலையை இழக்க உள்ளனர். இதுகுறித்து பேசிய யூபிஎஸ் வங்கி தலைமை அதிகாரி செர்கியோ எர்மோட்டி, “வாடிக்கையாளர்களுக்கு மிக எளிமையான பரிவர்த்தனைகளை உறுதி செய்யும் வகையில், வங்கி இணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.