கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் பொம்மை ஏற்றுமதி மதிப்பு 1017 கோடி ரூபாய் அளவில் பதிவாகியுள்ளது. இது கடந்த 2013 ஆம் ஆண்டின் ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில் 6 மடங்குக்கும் அதிகமான உயர்வாகும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்ட 2013 ம் ஆண்டில், இந்தியாவின் பொம்மை ஏற்றுமதி மதிப்பு 167 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொம்மைகளுக்கான சந்தையை முன்னேற்ற, அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும், சீனாவில் இருந்து மலிவான பொம்மைகள் இறக்குமதி செய்வதை தவிர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளுக்கான வரி 70% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2018-19 ஆம் நிதியாண்டில், 2960 கோடி மதிப்பில் பொம்மைகள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், உள்நாட்டு பொம்மைகளை பயன்படுத்துவதற்கான குரல் எழத் தொடங்கியது. அதை தொடர்ந்து, 2021-22 ஆம் நிதியாண்டில், பொம்மை இறக்குமதி 70% சரிந்து 870 கோடி ரூபாய் மதிப்பில் பதிவானது குறிப்பிடத்தக்கது.














