போயிங் நிறுவனம் தயாரித்துள்ள ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வெல்மோர் ஆகிய விண்வெளி வீரர்கள் ஸ்டார்லைனர் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளனர். ஸ்டார்லைனரை பொறுத்தவரை, மனிதர்களை சுமந்து செல்லும் முதல் விண்வெளி பயணம் இதுவாகும். இந்த நிலையில், வரும் ஜூன் 26 ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப பிரச்சனைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதனை சரி செய்த பிறகு அது மீண்டும் பூமிக்கு திரும்பும் பயணத்தில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்லைனர் விண்கலம் பூமியிலிருந்து விண்வெளிக்கு செலுத்தப்பட்ட பயணமும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இந்த சூழலில், விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் பயணமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.