தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் புதுடில்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து, மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறுகையில், ரூ.19, 744 கோடி ஒதுக்கீட்டில் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஹைட்ரஜன் எரிபொருளுக்கு மாறும் திட்டத்துக்கு 17, 490 கோடி ரூபாயும், முன்னோடி திட்டங்களுக்கு 1,466 கோடி ரூபாயும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு 400 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் 2030ம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 500 கோடி கிலோ பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்வதாகும். இதன் வாயிலாக, மொத்த முதலீடுகள் 8 லட்சம் கோடி ரூபாயை எட்டும். மேலும், ஆறு லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் இறக்குமதி குறையும் என்று கூறினார்.