சீனாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி நிலையத்திலிருந்து ஊழியர்கள் அதிகளவில் வெளியேறி வருகின்றனர். அப்பகுதியில் கோவிட் தொற்று உள்ளதா என்பதை பரிசோதிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் தொழிலாளர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய ஹெனான் மாகாணத்தில் உள்ள Zhengzhou நகரில் இந்த ஃபாக்ஸ்கான் (Foxconn) தொழிற்சாலை அமைந்துள்ளது. ஆப்பிள் நிறுவன சப்ளையரான ஃபாக்ஸ்கான் ஆலையில் கிட்டத்தட்ட 20,000 தொழிலாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் அங்கு கோவிட் தொற்றுநோய் வேகமாக பரவியது. சீனாவில் அக்டோபர் 31 அன்று மட்டும் கோவிட்-19 வழக்குகள் 2,500 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக அந்த தொழிற்சாலையில் கடுமையான கோவிட் விதிகள் பின்பற்றப்பட்டது. அந்த வகையில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைக்குள் உணவுப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் பொது போக்குவரத்து இல்லாத நிலையில் தொழிலாளர்கள் அந்த மண்டலத்தை விட்டு வெளியேற தொடங்கினர். கைகளில் அடிப்படைப் பொருட்களையும் தோளில் சாமான்களையும் வைத்துக் கொண்டு மக்கள் வீதிக்கு வருவது போன்ற காட்சிகள் பத்திரிகை செய்திகளில் வந்துள்ளது.
தொழிற்சாலையில் கோவிட் பரவியதை சுட்டிக்காட்டி, 'தப்பித்தால்தான் தொழிற்சாலை ஊழியர்கள் உயிர் பிழைக்க முடியும்' என்றனர் ஊழியர்கள். மேலும், தொழிற்சாலையில் உள்ள SARS-CoV-2 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தெரியவில்லை. அதோடு நடைமுறையில் இருந்த கோவிட் விதிகள் குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை. இதனாலேயே தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறு கின்றனர்.