நாட்டின் அரசியல் நிலைமைகளை பரிசீலிக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூலை 19-ம் தேதி ஆன்லைனில் சந்திக்க உள்ளனர், அதற்குமுன் ஆம் ஆத்மி கட்சி வெளியேறியது பேசுபொருளாகியுள்ளது.
மக்களவை உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் ஜூலை 19, 2025 அன்று மாலை 7 மணிக்கு ஆன்லைனில் நடைபெறும் என அறிவித்துள்ளார். எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தற்போதைய அரசியல் சூழ்நிலை, பாராளுமன்றத்தில் ஒருங்கிணைந்த செயல்பாடு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த டிரம்பின் கருத்து, பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் போன்ற தலைப்புகள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சி இந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ள நிலையில், இந்த அரசியல் நகர்வும் இந்தக் கூட்டத்தில் முக்கிய விவாதமாக மாறும் என்பது உறுதி.














