அண்ணா பல்கலை கழகத்தின், 42வது பட்டமளிப்பு விழா, இன்று சென்னையில் உள்ள அண்ணா பல்கலை கழக வளாகத்தில் நடக்கிறது. விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, முதன்மை விருந்தினராக பங்கேற்கிறார்.
பல்கலை கழக அளவில் தங்க பதக்கம் மற்றும் தர வரிசையில் முன்னிலை பெற்ற மாணவர்கள் மட்டும், இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.
விழாவில், கவர்னர் ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய இணையமைச்சர் முருகன், துணைவேந்தர், மாநில அமைச்சர்கள், உயர்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது உரை நிகழ்த்திய பிரதமர் மோடி,” புதிய கல்விக்கொள்கை இளைஞர்களுக்கு பெரியளவில் சுதந்திரத்தை அளிக்கிறது'' என கூறினார்.
மாணவர்களின் கனவை நிறைவேற்றும் ஆசிரியர்களுக்கு எனது நன்றிகள். ஒட்டுமொத்த உலக நாடுகளும் இந்தியாவை உற்று நோக்குகின்றன. 125 ஆண்டுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் சென்னைக்கு வந்துள்ளார்.இளைஞர்கள் தான் வளர்ச்சியின் இன்ஜின்கள் என்று கூறியுள்ளார். தற்போதைய இந்திய இளைஞர்கள், தொழில் முனைவோர்களாக மாறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்
உலகத்தில், மொபைல்போன் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கோவிட் பெருந்தொற்றை இந்தியா மிகச்சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி பெற்றது.
கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவில் புதிய தொழில் நிறுவனங்கள் 15 ஆயிரமாக அதிகரித்துள்ளது. உக்ரைன் போரால் உலகம் நெருக்கடியை சந்தித்த போது, இந்தியா உணவு தானிய உற்பத்தியை அதிகரித்தது. உலகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது
கார்பரேட் வரி குறைப்பு போன்ற வரி சீர்திருத்தங்களால் தொழில்துறையில் ஏராளமான முதலீடு குவிந்துள்ளது. கதிசக்தி போன்ற திட்டங்கள் , நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பெரியளவில் மாற்றங்களை கொண்டு வருகின்றன.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு அண்ணா பல்கலை கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் என்ற பெருமை நரேந்திர மோடிக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.