ஆகாசா ஏர் விமான நிறுவனம் செப்டம்பர் இறுதிக்குள் 150க்கும் மேற்பட்ட வாராந்திர விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
இந்த விமான நிறுவனம் ஆகஸ்ட் 7-ம் தேதி செயல்படத் தொடங்கியது. இப்போது மும்பை-அகமதாபாத், பெங்களூரு-கொச்சி மற்றும் பெங்களூரு-மும்பை ஆகிய மூன்று வழித்தடங்களில் பறக்கிறது.
இப்போதைக்கு, பெங்களூரு-மும்பை வழித்தடத்தில் ஒவ்வொரு திசையிலும் தினமும் இரண்டு விமானங்களை விமான நிறுவனம் இயக்குகிறது.
இந்நிலையில், பெங்களூரு-மும்பை வழித்தடத்தில் அதன் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், விமான நிறுவனம் ஆகஸ்ட் 30, 2022 முதல் ஒரு கூடுதல் தினசரி விமானத்தையும், செப்டம்பர் 19, 2022 முதல் மற்றொரு விமானத்தையும் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.
அதோடு, செப்டம்பர் 10 முதல் பெங்களூருவை சென்னையுடன் இணைக்கும் புதிய வழித்தடத்தையும் தொடங்க உள்ளது. அந்த வகையில், செப்டம்பர் இறுதிக்குள் 150 வாராந்திர விமானங்களைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை, அகமதாபாத், கொச்சி, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய ஐந்து நகரங்களில் ஆறு வழித்தடங்களுக்கான விமானங்களை ஆகாசா ஏர் ஏற்கனவே அறிவித்துள்ளது.
தற்போது, இந்த நிறுவனத்திடம் மூன்று விமானங்கள் உள்ளன. மூன்றாவது விமானம் ஆகஸ்ட் 16 அன்று பெறப்பட்டது. ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு புதிய விமானத்தைச் சேர்க்க திட்டமிட்டுள்ளது. மார்ச் 2023 இறுதிக்குள் அதன் மொத்த எண்ணிக்கை 18 ஆக இருக்கும்.
அடுத்த நான்கு ஆண்டுகளில், விமான நிறுவனம் 54 கூடுதல் விமானங்களைச் சேர்க்கும். அதன் மொத்த எண்ணிக்கை 72 விமானங்களாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.