அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, திங்கள்கிழமை 9வது முறையாக செங்கோட்டையில் இருந்து தேசியக்கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
சுமார் 83 நிமிடம் உரையாற்றிய பிரதமர், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். நாட்டின் சுதந்திரத்தில் பங்காற்றிய மறக்கப்பட்ட மாவீரர்களையும், பெண்களின் வலிமையையும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.
கடமையின் பாதையில் தங்கள் உயிரைக் கொடுத்த மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் வீர் சாவர்க்கர் உட்பட பல எண்ணற்ற புரட்சியாளர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் அடித்தளத்தை அசைத்ததாக பிரதமர் மோடி கூறினார்.
வரும் ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற உதவும் 'பஞ்சபிரான்' என்ற ஐந்து உறுதிமொழிகள் குறித்து அவர் பேசினார். வரவிருக்கும் ஆண்டுகளில், நாம் பஞ்சபிரான் (5 வாக்குறுதிகள்) மீது கவனம் செலுத்த வேண்டும். முதலாவதாக, வளர்ந்த இந்தியாவின் உறுதியுடன் முன்னேற, இரண்டாவது, அடிமைத்தனத்தின் அனைத்து தடயங்களையும் அழிக்க, மூன்றாவது, நமது பாரம்பரியத்தைப் பற்றி பெருமிதம் கொள்ள, நான்காவது, நமது ஒற்றுமையின் பலத்தில் கவனம் செலுத்துவது மற்றும் ஐந்தாவது, குடிமக்களின் கடமைகளை நேர்மையுடன் நிறைவேற்றுவது என்பதாகும். அதை முதலமைச்சர்களும் செய்ய வேண்டும்.
இளைஞர்கள் தங்கள் வாழ்நாளின் அடுத்த 25 ஆண்டுகளை தேசத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அப்போதுதான் முழு மனிதகுலத்தின் வளர்ச்சிக்காக நாம் பாடுபட முடியும் என்றார்.