பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 5G தொழில்நுட்பச் சேவைகள் இந்த மாதத்தில் தொடங்கப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமை இயக்குனர் கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அனைத்து நகரங்கள் மற்றும் முக்கிய கிராம பகுதிகளில் 5G சேவைகள், 2022 ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு, 2024 மார்ச் மாதத்திற்குள் முழுமையாகக் கட்டமைக்கப்படும் என்று கோபால் விட்டல் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: "இந்தியாவின் 5,000 நகரங்களில் 5G சேவைகளை வழங்குவதற்கானத் திட்ட அறிக்கை ஏற்கனவே தயாராக உள்ளது. மேலும், இது எங்கள் நிறுவனத்தின் வரலாற்றில் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடாக இருக்கும். வீடுகள், டவர்கள் போன்றவற்றை ஃபைபர் மூலம் இணைத்து, ஒவ்வொரு நிலையிலும் நாங்கள் எங்கள் தொலைத்தொடர்பு சேவையை உறுதி செய்துள்ளோம். பல ஆண்டுகளாக இந்தப் பணி நடத்தப்பட்டு, நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், எங்களின் பல்வேறு துறைகளும் 5G தொழில்நுட்பத்திற்குத் தக்கவாறு மாற தயார் நிலையில் உள்ளன. குறிப்பாக, நெட்வொர்க்கிங் துறையில், MPLS மற்றும் இணையம் ஆகியவை 5G தொழில்நுட்பத்தை முழுமையாக ஏற்கும் தயார் நிலையில் உள்ளன. மேலும், இந்தத் தொழில்நுட்பத்தைச் சிறந்த முறையில் செயல்படுத்த, எங்களது கிளவுட் நெட்வொர்க் துறையின் கூட்டு நிறுவனங்கள் துணை புரியும்" என்றார். அத்துடன், சமீபத்தில் நடைபெற்ற 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்குப் பின்னர், ஏர்டெல் வசம் உள்ள தொழில்நுட்ப அம்சங்களை அவர் எடுத்துரைத்தார். நாட்டின் ஒவ்வொரு 3.5Ghz வட்டத்திற்கும் 100Mhz மற்றும் ஒவ்வொரு 26Ghz வட்டத்திற்கும் 800Mhz ஏர்டெல்லுக்கு சொந்தமாகி உள்ளதாகக் கூறினார். மேலும், 4Gbps திறன் கொண்ட இந்த பேண்டில், 1800/2100/900 என்ற முறையில், பல நிலைகளில் பேண்டுகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறினார். இதன் ஏல மதிப்பு 43040 கோடி ரூபாயாகும் என்று அவர் தெரிவித்தார். எனவே, ஏர்டெல் நிறுவனம், பான் இந்தியா முறையில், சிறந்த முறையிலான 5G தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த முடியும் என்று அவர் உறுதியாகக் கூறினார்.