ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்காவிக் அருகே உள்ள ஃபக்ரடால்ஸ்ஃப்ஜால் மலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பின் அந்நிலநடுக்கம் அதிகரித்த நிலையில் எரிமலை வெடித்துள்ளதாக ஐஸ்லாந்திய வானிலை அலுவலகம் (IMO) தெரிவித்துள்ளது. எரிமலை வெடிப்பால் அதிலிருந்து எரிமலைக் குழம்புகள் வெளியேறியது. இதனால் அப்பகுதியில் அவசர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வினை உள்ளூர் செய்தி நிறுவனங்கள் படங்கள் மற்றும் நேரடி ஒளிபரப்புகள் மூலம் பதிவிட்டது. நிலைமையை ஆய்வு செய்வதற்காக ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டது. இ௫ப்பினும் வெடிப்பில் தாக்கம் அதிகமானதால் அந்த தளத்தில் விமானங்கள் பறப்பதைத் தடைசெய்ய சிவப்பு குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் IMO தெரிவித்துள்ளது.
2010 இல் வெடித்த Eyjafjallajokull எரிமலை வெடிப்பு விமானதளத்தை பாதித்து சுமார் 100,000 விமானங்களை நிறுத்தியது . நூற்றுக்கணக்கான ஐஸ்லாந்து மக்களை அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற்றியது. மேலும் இந்த வெடிப்பு வளிமண்டலத்தில் அதிக புகையை ஏற்படுத்தியது. ஆனால் இந்த எரிமலை வெடிப்பு Eyjafjallajokull எரிமலை வெடித்ததைப் போலில்லை என்றும் இந்த வெடிப்பு வளிமண்டலத்தில் அதிக புகையை கக்கவில்லை என்றும் அதிகாரிகள் ௯றியது குறிப்பிடத்தக்கது.














