ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே 8 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
கேரள மக்கள் மற்றும் தென் தமிழகத்தில் கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகைகளுள் ஒன்று ஓணம். மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களை காண வருவதாகவும், அவரை வரவேற்கும் வகையில் திருவோணம் கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது. இப்பண்டிகை 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
இந்தாண்டு ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் கேரள மக்கள் ஓணம் பண்டிகையை எளிமையாக கொண்டாடினர். இந்நிலையில், தென்மேற்கு பருவமழை, குரங்கம்மை பிரச்சனை உள்ளிட்டவைகள் அம்மாநில அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.
ஓணம் பண்டிகையை பொறுத்தவரையில் மிக முக்கியமான பண்டிகை என்பதால் நாடு முழுவதும் கல்வி, தொழில் உள்ளிட்டவைகளுக்காக சென்றுள்ள மலையாளிகள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். அதேநேரத்தில் கைகொட்டுக்களி, புலிக்களி, யானைத்திருவிழா, கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், சிறப்பு உணவுகள், அத்தப்பூக்கோலம், பாரம்பரிய நடனப் போட்டிகளென 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கேரளா செல்வது வழக்கம்.
இதனால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழகத்தின் எல்லை மாவட்டங்களான கோவை, குமரி, நீலகிரி ஆகிய பகுதிகளிருந்து மாநில அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கும்.
மேலும் ஓணம் பண்டிகைக்காக சென்னையிலிருந்து தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் வழியாக கேரளாவுக்கு 8 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன














