கடல் மற்றும் கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதில், இந்தியா உலகிலேயே முதலிடத்தில் உள்ளது,'' என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு துறை இணை அமைச்சர் முருகன் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நாமக்கல்லில் தேசிய பால்வள வாரியம் வழங்கும் கடன் உதவியுடன், 89 கோடி ரூபாய் மதிப்பில், புதிய ஆவின் பால் பண்ணை அமைக்கப்பட உள்ளது. 'ராஷ்ட்ரிய கோகுல் மிஷின்' திட்டத்தில், நாட்டு பசு மாடுகள் வளர்க்க, மத்திய அரசு, 50 சதவீதம் மானியம் வழங்குகிறது.
தேசிய மீன்வளவாரியத்தில், 7,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்துக்கு மட்டும், 1,800 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இதன்மூலம் திருவள்ளூர், திருவொற்றியூர், நாகை, விழுப்புரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில், மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்துதல், மீன் சந்தைகளை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடல் மற்றும் கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதில், இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது.
மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்ததுபோல், கொச்சின், சென்னை, விசாகப்பட்டினம், பாரதீப், (பெட்டுவா காட்) மேற்குவங்கம் ஆகிய, ஐந்து மீன்பிடி துறைமுகங்கள், தலா, 100 கோடி ரூபாய் மதிப்பில், நவீனப்படுத்தப்பட உள்ளன. கடல்பாசி தொழிலை மேம்படுத்த, 120 கோடி ரூபாய் மதிப்பில், ராமேஸ்வரத்தில், திட்டத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.














