கால் டாக்சி ஓட்டுனர்கள், உணவு வினியோக ஊழியர்கள் உள்ளிட்ட 400 வகையான பணியாளர்களுக்கு, சமூக பாதுகாப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ராஜ்யசபாவில், பா.ம.க., எம்.பி., அன்புமணி எழுப்பிய கேள்விக்கு, மத்திய தொழிலாளர் நலத் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். கால் டாக்சி ஓட்டுனர், உணவு வினியோக ஊழியர்கள் உள்ளிட்ட, 400 வகையான தொழில்களை செய்யும் பணியாளர்களுக்கு, சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
2020-ம் ஆண்டின் சமூகப் பாதுகாப்பு விதிகள், பணியின் போது உயிரிழப்பு, ஊனம் ஏற்படுதல் ஆகியவற்றுக்கு இழப்பீடு, விபத்துக் காப்பீடு, மருத்துவம், மகப்பேறு பயன்கள், முதுமைக்கால பாதுகாப்பு போன்றவற்றில், பொருத்தமான சமூகப் பாதுகாப்பு திட்டங்களை வகுக்க வகை செய்கின்றன. இதற்காக, சமூக பாதுகாப்பு நிதியம் ஒன்றை ஏற்படுத்தவும் இந்த விதிகள் வகை செய்கின்றன.
தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்கள், அவற்றின் ஆண்டு வருமானத்தில், 1 முதல் 2 சதவீத தொகையை, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அளிக்க வேண்டும்.
தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பற்றிய விபரங்களை பதிவு செய்து கொள்ள இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.