இந்தியாவில், குறுகிய காலத்தில் 80% 5ஜி தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக, மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவா தெரிவித்துள்ளார். மேலும், பல உலக நாடுகள், 40 முதல் 50 சதவீத 5ஜி தொழில்நுட்ப இலக்கை அடைவதற்கு பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டன. ஆனால், இந்திய அரசு, குறுகிய காலத்தில் 80 சதவீத 5ஜி தொழில்நுட்ப சேவையைச் செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளது என்று கூறினார்.
தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற தொழில்துறை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இந்தச் செய்தியை அறிவித்தார். இதற்காக, தீவிர செயல்பாட்டில் ஈடுபடும் படி, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் மற்றும் இதர கட்டமைப்பு நிறுவனங்களுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், தொலை தொடர்பு துறையில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகக் கூறினார். அத்துடன், ட்ராய் அமைப்பின் ஒழுங்கு முறைகளின் படி தொலைத்தொடர்பு சேவையின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று கூறினார். இதை நோக்கி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயலாற்ற வேண்டும் என்று கூறினார். அத்துடன், இந்தியாவில், 5ஜி சேவை விரைவில் தொடங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற தொலைத்தொடர்புத் துறை மாநில அமைச்சர் தேவுசின் சவுகான், இந்தியாவை வளரும் நாடு அந்தஸ்திலிருந்து, வளர்ந்த நாடு அந்தஸ்துக்கு உயர்த்துவதில் 5ஜி தொழில்நுட்பத்தின் பங்கு மிகவும் முக்கியம் என்றார். மேலும், இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் சுகாதாரம், கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகள் வளர்ச்சி அடையும் என்று கூறினார்.