கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடு விதிமுறைகளை கடுமையாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
கர்நாடகாவில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் சேரும் நோயாளிகள் எண்ணிக்கையும் ஏறுமுகமாக உள்ளது.
இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி சுகாதாரப்பிரிவு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், கர்நாடகாவில், இரண்டு வாரமாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. தினமும் 2,500 பேருக்கு, தொற்று ஏற்படுகிறது. மருத்துவமனையில் நோயாளிகள் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
குறிப்பாக மூன்று டோஸ் தடுப்பூசி பெற்றவர்களுக்கும் தொற்று ஏற்படுவதாக அவர் கூறினார்.
மேலும் தொற்று பரவுவது குறித்து, மத்திய அரசும் கடிதம் எழுதி கவலை தெரிவித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் விதிமுறைகளை கடுமையாக்கவும், மாநில சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
பொது இடங்களில், முக கவசம் அணியாமல் நடமாடுவோருக்கு, அபராதம் விதிக்கும்படி கொரோனா தொழில்நுட்ப ஆலோசனை கமிட்டி சிபாரிசு செய்திருந்தது. ஆனால் மாநில அரசு அபராதம் விதிப்பதிலிருந்து விலக்களித்தது.தற்போது தொற்று அதிகரிப்பதால், முக கவசம் அணியாதோருக்கு, அபராதம் விதிக்க ஆலோசிக்கிறது.
இதற்கு முன் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டனர். இனி தொற்று அறிகுறி இல்லாவிட்டாலும் பரிசோதனை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.














