சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது குறித்து பதிலளிக்க தமிழக உள்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ராஜபாளையத்தை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் இது தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 2017ஆம் ஆண்டு என் மகன் கொலை செய்யப்பட்டார் . அது சம்பந்தமான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.. தற்போது அரசுத் தரப்பில் ஆஜராகி வாதிடும் வழக்கறிஞருக்கு பதிலாக பி.மோகனை சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கக்கோரி விருதுநகர் கலெக்டருக்கு மனு அனுப்பினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நீதிபதி வி.சிவஞானம், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை மாநில அரசு பின்பற்றுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கை பராமரிக்க பயனுள்ள வகையில் வழக்கை நடத்த விழிப்புடன் இருக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது.
மேலும் சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிக்கவும், அவர்களை கண்காணிக்கவும் விதி வகுக்க வேண்டும். தகுதியானவர்களை நியமிக்க பயனுள்ள வழிமுறைகளை அரசு வெளியிட வேண்டும். இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பி வழக்கு விசாரணை செப்டம்பர் 1 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று கூறினார்.