நேற்று நொய்டா 'சூப்பர்டெக்' இரட்டை கோபுரங்கள் 9 வினாடிகளில் வெடி வைத்து தகர்க்கப்பட்டன.
2000-களின் நடுப்பகுதியில் நொய்டாவில் டெல்லியின் சின்னமான குதுப் மினார் விட உயரமான இரண்டு கோபுரங்களில் பல சொகுசு அடுக்கு மாடிகளைக் கட்டத் தொடங்கப்பட்ட திட்டம் தான் சூப்பர்டெக் வீட்டுத் திட்டம்.
நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய இரட்டை நகரங்களை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எமரால்டு கோர்ட் எனப்படும் சூப்பர்டெக் வீட்டுத் திட்டம் தரையில் இருந்து 40 தளங்கள் வரை உயரும் இரண்டு கோபுரங்களை கொண்டது. இந்த இரண்டு கோபுரங்களும் குடியிருப்பாளர்கள் மற்றும் சூப்பர்டெக் இடையே ஒரு பத்தாண்டுகால சட்டப் போரின் மையமாக இருந்தன. ஆரம்பத்தில் தோட்டம் அமைக்க திட்டமிடப்பட்ட இடத்தில் இரட்டை கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டதுதான் பிரச்சனைக்கு காரணம்.
இது குறித்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனடிப்படையில் கோபுரங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அடுத்ததாக இரட்டைக் கோபுரங்கள் வெடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு 3,500 கிலோ வெடிமருந்துகள் கட்டிடங்களில் பொருத்தப்பட்டன. கட்டிடங்களின் தூண்களில் கிட்டத்தட்ட 7,000 துளைகளில் வெடிபொருட்கள் செருகப்பட்டு 20,000 மின் சுற்றுகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று ஆகஸ்ட் 28-ம் நாள் அந்த கட்டிடங்கள் ஒன்பது வினாடிகளில் வெடிக்கப்பட்டு தூள் மேகமாக மாறியது. மும்பையைச் சேர்ந்த எடிஃபைஸ் இன்ஜினியரிங் நிறுவனம் இரண்டு கோபுரங்களையும் இடிக்கும் பணியை மேற்கொண்டது.














