கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில், சென்னையில் உள்ள வீடுகளின் சராசரி விலை, 1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவித்து உள்ளது.
ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான கிரடாய், ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 'கோலியர்ஸ் இந்தியா' மற்றும் தரவு பகுப்பாய்வு நிறுவனமான 'லயாசஸ் போரஸ்' ஆகியவை இணைந்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. எட்டு பெரு நகரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்ட அந்த அறிக்கையில், வீடுகளின் தேவை அதிகரிப்பு, கட்டுமான செலவு அதிகரித்தது ஆகியவை, வீடுகள் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. கடந்த ஜூன் காலாண்டில், வீடுகள் விலை சராசரியாக 5 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் அதிகபட்சமாக 10 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு முந்தைய காலத்தை விட, இந்த எட்டு நகரங்களில் வீடுகள் விலை தற்போது அதிகரித்துள்ளது.ஆமதாபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் முறையே, 9 மற்றும் 4 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், சென்னையை பொறுத்தவரை, ஒரே 1 சதவீதம் அளவுக்கு மட்டுமே அதிகரித்துள்ளது குறிப்பிடத் தகுந்தது. இங்கு, ஒரு சதுர அடி 7,129 ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
மத்திய சென்னை பகுதியில் 13 சதவீதம் அளவுக்கு விலை சரிந்துள்ளது. மேற்கு பூவிருந்தவல்லியில் 13 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டு உள்ளதை அடுத்து, அதன் பாதிப்புகள் வீடுகள் விற்பனையில் ஓரளவு இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக வீடுகள் விலையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. தற்போது வீடு கட்டுவதற்கு தேவைப்படும் பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ளதால், கட்டுமான நிறுவனங்கள் விலையை அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.