காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை செப்டம்பர் 7ல் துவங்க உள்ளதாக காங்கிரஸ் தமிழக தலைவர் அழகிரி தெரிவித்தார்.
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் சார்பில் நடை பயணங்கள் நடக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் அழகிரி நேற்று காலை தென்காசியிலிருந்து நடைபயணத்தை துவக்கி வைத்தார்.
அவர் நேற்று மாலை திருநெல்வேலியை வந்தடைந்தார். அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசின் செயல்பாடுகள்மற்றும் வரி விதிப்புகளால் மக்கள் துயரத்தில் உள்ளனர். இதை கண்டித்து மாவட்டம் தோறும் கட்சி சார்பில் நடைபயணம் நடக்கிறது. 'பாரத் ஜோடோ' -பாரதமே ஒன்றிணைவோம் பெயரில் அகில இந்திய நடைபயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.
செப்டம்பர் 7ல், இந்த நடைபயணம் கன்னியாகுமரியில் துவங்கி, தமிழகம், கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 12 மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்களில் 3,500 கி.மீ., நடக்கிறார். நாடு முழுவதிலும் இருந்தும் தொண்டர்கள் பங்கேற்கின்றனர் என்று அவர் கூறினார்.
இந்த நடைபயணம் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, ஜெயக்குமார், மேலிட பார்வையாளர் வல்ல பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.