இலவச வாக்குறுதிகள் தொடர்பாக தங்களின் கருத்தை தெரிவிக்கும்படி அனைத்து கட்சிகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
தேர்தலின் போது கட்சிகள் இலவச வாக்குறுதிகள் அளிப்பது சர்ச்சையாகி, விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இலவசங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில், இலவச அறிவிப்புகளை வெளியிட தடை விதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்துள்ள பொதுநலன் வழக்கை 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த விசாரணையின் போது, ‘இந்த விவகாரம் முக்கிய பிரச்னை என்பதால் அனைத்து தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும்,’ என நீதிமன்றம் தெரிவித்தது. இதில், ‘அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையாக கொண்டு சமூக நீதியை காக்கவே இலவசங்கள் வழங்கப்படுகிறது,’ என திமுக பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் எழுதியுள்ளது.
அதில், இலவச வாக்குறுதிகளை கொடுக்கும் கட்சிகள், அவற்றை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரங்கள், கைவசமுள்ள நிதி, வரி விதிப்பு, கடன் பெறும் திட்டங்கள் குறித்த விவரங்களையும் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக தனது கருத்துகளை அக்டோபர் 19ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையாக கொடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த கடிதத்துக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.














