நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் இருவருக்கும் அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது.
சோனியா காந்திக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அவர் விசரணைக்கு ஆஜர் ஆவதில் தாமதம் ஏற்பட்டது. அனால், அதற்கு முன்னர் ராகுல் காந்தியிடன் அமலாக்க துறையினர் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவந்த சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் விசாரணைத் தேதியை மாற்றி ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது. விசாரணைக்கு ஆஜரான சோனியா காந்தியிடம் மூன்று நாள்களில் 11 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. விசாரணை தொடர்பாக வெளியான தகவலின்படி சோனியா இடம் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள ஐ.டி.ஓ-வில் அமைந்திருக்கும் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். சோதனை முடிவுக்குப் பிறகே தகவல்கள் வெளிவரும் என்கிறார்கள்.