பிரான்ஸ் தலைநகர் பாரீசில், வருகிற 14ம் தேதி அந்நாட்டு தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி தனது பிரான்ஸ் பயணத்தை தொடங்கியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் நடைபெற உள்ள தேசிய தின விழாவில், இந்திய ராணுவத்தின் முப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழவுள்ளது. மேலும், இந்த பயணத்தின் போது, 26 ரபேல் எம் போர் விமானங்கள் கொள்முதல், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பு ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் பயணத்தை தொடர்ந்து, பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில்,
அதிபர் முகமது பின் ஜாயத் நயன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளார். இந்த பயணங்களின் மூலம், இந்தியா-பிரான்ஸ், இந்தியா-அமீரகம் இடையிலான உறவுகள் வலுப்படும் என்று நம்பப்படுகிறது.