ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் ஹாலோ பிளாக் கற்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களின் விலையை குறைக்க வேண்டி மூன்று நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் சுமார் 50000-க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் கற்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஈரோடு மாவட்டத்தில் கோபி, நம்பியூர் ஆகியவற்றில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு நாள்தோறும் 2,50,000 கற்கள் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கும் மூலப்பொருள்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கற்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 6 அங்குல அளவுள்ள ஹாலோபிளாக் கற்கள் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் விலை உயர்வின் காரணமாக 40 முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் கட்டிட தொழிலாளர்கள் முதல் கட்டுமான தொழிலாளர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஹாலோ பிளாக் கற்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் கோபி, நம்பியூரில் உள்ள ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.