வரி ஏய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், அபராதம் விதிக்கப்படும் என்றும் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
''வரி ஏய்ப்பில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் அவர்களின் ஜி.எஸ்.டி., உரிமம் ரத்து செய்யப்பட்டு அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
வணிக வரித் துறையின் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களுடனான சீராய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு பின் அமைச்சர் மூர்த்தி அளித்த பேட்டியில், அரசின் வரி வருவாயை உயர்த்தும் நோக்கில், கோட்ட வாரியாக ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த அரசு பொறுப்பேற்ற பின், வணிக வரி வருவாய் 61 சதவீதமும், பத்திரப்பதிவு வருவாய் 70 சதவீதமும் உயர்ந்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் வரி வருவாயை மேலும் உயர்த்த, அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களின் ஜி.எஸ்.டி., உரிமம் ரத்து மற்றும் அபராதம் போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டால், அந்நிறுவனம் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று அவர் கூறினார்.