ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பணியாற்றி வரும் நபர் ஒருவர், கொச்சி சர்வதேச விமான நிலையம் வழியாக 1.4 கிலோ தங்கம் கடத்த முயன்றுள்ளார். இதை கண்டறிந்து, அவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த ஷாஃரி என்பவர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அவர் தனது கையில் பட்டை வடிவில் தங்கத்தை கட்டி மறைத்து எடுத்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைனில் இருந்து கொச்சி வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது. கையும் களவுமாக அவர் பிடிபட்டதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, ஏர் இந்தியா நிறுவனம், அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. மேலும், இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஊழியர்கள் ஈடுபட்டால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனம் எச்சரித்துள்ளது.