அக்டோபர் மாதத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து வரலாற்று உச்சமாக ரூ.83,000 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். இது கடந்த மார்ச் 2020-ல் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில் விற்ற தொகையை விட அதிகம். இந்த நிலையிலும், இந்தியப் பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 4 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது. இதற்கு காரணம், உள்நாட்டு முதலீட்டாளர்கள் (DII) இந்த காலகட்டத்தில் ரூ.74,200 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து வெளியேறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலில், சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் சீனாவின் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். அதே நேரத்தில், இந்தியப் பங்குச் சந்தையின் மதிப்பு அதிகமாக இருப்பதாகவும், இந்திய நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டு லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து தங்கள் முதலீட்டை எடுத்துச் செல்கின்றனர். மேலும், அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்துள்ளதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.














