சிப்காட் தொழிற்சாலை கழிவுகளால் 10 கி.மீ. சுற்றளவுக்கு நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது.இந்த சிப்காட்டில் இயங்கும் சில நிறுவனங்கள் சட்ட விரோதமாக ஆலை கழிவுகளை வெளியேற்றி வருகின்றன. இதன் காரணமாக சிப்காட் வளாகத்தில் இருந்து ஓடையில் பெருக்கெடுத்து வரும் கழிவு நீர் 14 ஏக்கர் பரப்பிலான ஓடைக்காட்டூர் என்ற பகுதியில் உள்ள குளத்தில் நிரம்பி உள்ளது. அதில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அடுத்தடுத்து 8 குளங்களுக்கு செல்கிறது. இதனால் சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:- அபாயகரமான ரசாயன கழிவுகளால் தோல் நோய்களும், சுவாச கோளாறுகளும், ஏற்படுவதுடன் புற்று நோய் பாதிப்புகளும் இப்பகுதியில் அதிகரித்து உள்ளது. இதனால் பலர் கிராமங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். தொழிற்சாலைகள் கழிவுகளை வெளியேற்றக் கூடாது. மறுசுழற்சி முறையில் கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. இந்த கிராமங்களை மாசற்ற பகுதியாக மாற்ற தேவையான சாத்திய கூறுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.