ஈரானில் மேலும் 100 பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து அங்கு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மாணவிகள் கல்வி பயில்வதை தடுப்பதற்காக, மத அடிப்படைவாதிகளால் விஷம் கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. மேலும் இது தொடர்பாக ஈரான் அரசு விசாரணையை தொடங்கியது. ஆனாலும் பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ஈரானின் 10 மாகாணங்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இதனிடையே பெண்களின் கல்வி உரிமையை பறிக்கும் நோக்கில் அவர்களுக்கு விஷம் வைக்கப்படும் விவகாரத்தில் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்துள்ளது. தலைநகர் டெஹ்ரான் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் பெற்றோருடன் பொதுமக்களும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.