மதுரை மாநகரில் நேற்று தீபாவளி நாளில் 1,000 டன் குப்பைகள் சேர்ந்தன. அவற்றை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஒய்வில்லாமல் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் தினமும் 750 முதல் 800 டன் குப்பை தேங்கும். அதனை தூய்மைப் பணியாளர்கள் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அப்புறப்படுத்துவார்கள். வீடு, வீடாக சேகரிக்கும் குப்பை, பொது இடங்களில் சேகரிக்கும் குப்பைகளை குறிப்பிட்ட இடங்களில் குவிப்பர். பின்னர் அதனை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தனித்தனியாக பிரித்து வாகனங்கள் மூலம் வெள்ளக்கல் குப்பை கிடங் கில் போடுவார்கள்.
சித்தரைத் திருவிழா, தீபாவளி, பொங்கல், ஆயுதப் பூஜை உள்ளிட்ட விழாக்களில் குப்பைகள் அதிகரிக்கும். நேற்று தீபாவளி பண்டிகை என்பதால் 1000 டன் குப்பை சேர்ந்தது. இந்தக் குப்பைகளை இன்று காலை முதல் தூய்மைப் பணியாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.