2022 ஆம் ஆண்டில் மட்டும், இதுவரை 29 நாடுகளில் ஊடகத்துறையைச் சேர்ந்த 115 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது. பிராந்திய வாரியாக பிரஸ் எம்பளம் பிரச்சாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நடப்பு ஆண்டில், லத்தீன் அமெரிக்காவில் 39 பத்திரிக்கையாளர்களும், ஐரோப்பாவில் 37 ஊடகவியலாளர்களும், ஆசியாவில் 30 பேரும், ஆப்பிரிக்காவில் 7 பேரும், வட அமெரிக்காவில் 2 பேரும் கொல்லப்பட்டதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பில் ஐரோப்பா மோசமான நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து 34 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் பணியில் உள்ள போது கொல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புள்ளி விவரங்கள் அடிப்படையில், கடந்த 5 ஆண்டுகளில், பத்திரிக்கையாளர் இறப்புகள் நேர்ந்துள்ள நாடுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வரிசையில், மெக்சிகோ 69, ஆப்கானிஸ்தான் 44, இந்தியா 37, உக்கரை 36, பாகிஸ்தான் 34, சிரியா 24, பிலிப்பைன்ஸ் 21, ஏமன் 17, சோமாலியா 13, பிரேசில் 12 என்ற எண்ணிக்கையில் மரணங்கள் ஏற்பட்டுள்ளன.