தொழிலாளர்கள் 12 மணி நேரம் வரை வேலை செய்வதற்கு வழிவகை செய்யும் தொழிற்சாலை சட்ட திருத்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் வந்த நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், மசோதாவை தாக்கல் செய்தார்.
தொழிலாளர்களின் அதிகபட்ச பணி நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக மாற்றும் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும், காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், “தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த சட்டம் கொண்டுவரப்படும். 12 மணி நேரம் என்பதை தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைகள் தேர்வு செய்து கொள்ளலாம். தொழிற்சாலைகளுக்கு ஏற்ப நெகிழ்வு தன்மை கொண்டு வரவேண்டும் என்பதற்காக, மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு அமல்படுத்தி உள்ள காரணத்தால், மாநிலத்திலும் அமல்படுத்தப்படவில்லை” என்று அமைச்சர் கணேசன் கூறியுள்ளார்.