பாகிஸ்தான் முழுவதும் முதல் காலாண்டில் நடந்த தாக்குதலில் 127 காவல் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தி நியூஸ் இன்டர்நேசனல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில், முதல் காலாண்டில் நடந்த தாக்குதலில் மொத்தம் 127 காவல் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. தெஹ்ரீக்-ஐ-தலீபான் பாகிஸ்தான் பயங்கரவாத குழுவுடனான பேச்சுவார்த்தை கடந்த நவம்பரில் தோல்வி அடைந்த பின்பு, அந்த குழு தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டில் தாக்குதலில் உயிரிழந்த போலீசாரின் எண்ணிக்கை 36 ஆக இருந்தது. 2018-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 30 ஆகவும், 2019-ம் ஆண்டில் 38 ஆகவும், 2020-ம் ஆண்டில் 28 ஆகவும், 2021-ம் ஆண்டில் 59 ஆகவும் இருந்தது. இது 2022-ம் ஆண்டில் 120 ஆக அதிகரித்து இருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் முழுவதும் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் நடந்த தாக்குதலில் 127 காவல் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.