நடப்பு நிதி ஆண்டில், ரயில் பயணிகளின் எண்ணிக்கை 12.8% உயர்ந்து உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், ரயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 52.8 கோடி மக்கள் ரயிலில் பயணம் செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12.8% உயர்வாகும். இதன் மூலம், ரயில்வே நிர்வாகத்திற்கு 5254 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், வருவாயில் 12.1% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி, சரக்கு போக்குவரத்து துறையிலும் கணிசமான முன்னேற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், 29.351 மில்லியன் டன் அளவில் சரக்கு கையாளல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசாங்கத்துக்கு 2651 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.