சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க லடாக் எல்லையில் 135 கி.மீ. தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.
ஆரம்ப காலத்தில் லடாக் எல்லையில் முகாமிட்டிருந்த வீரர்களுக்கு கழுதைகள் மூலமாக உணவு, ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது எல்லைப் பகுதிக்கு செல்ல சாலை வசதி கிடையாது. 1980-களில் எல்லைப் பகுதியை அடைய 12 முதல் 15 நாட்களாகின. இப்போது நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் லடாக்கின் காராகோரத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் ஜாசப்லா வரையிலான 3,488 கி.மீ. எல்லைப் பகுதிகளில் ரூ.15,477 கோடி செலவில் 2,088 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது. இதன்பிறகு லடாக் எல்லையில் சாலை உள்கட்டமைப்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. இதையடுத்து தற்போது சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க லடாக் எல்லையில் 135 கி.மீ. தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.