மும்பையில் திடீரென புழுதி புயல் வீசியதால் ராட்சத விளம்பர பலகை காற்றுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் சரிந்து விழுந்தது.
மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பை நகரில் நேற்று திடீரென புழுதிப்புயல் வீசியது. முன்னதாக 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென காற்றுடன் புழுதி புயல் வீசியது. இதனால் மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதிகள் தூசி படலமாக காட்சி அளித்தது. இந்நிலையில் மும்பை காட்கோபர் கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் உள்ள போலீஸ் கிரவுண்ட் பெட்ரோல் பங்கில் அமைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பரப்பலகை சரிந்து விழுந்தது. 100 அடி உயரம் கொண்ட இந்த பதாகை சரிந்து விழுந்ததால் அருகில் இருந்த வீடுகள் நொறுங்கியது. மேலும் பலர் அதில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 70 பேர் காயமடைந்துள்ளனர் மேலும் 8 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியிருந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல் மந்திரி தெரிவித்திருந்தார். மேலும் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்