ஒரே நாளில் 14 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் ராமேசுவரம் மீனவர்களிடையே கடும் பரபரப்பு நிலவுகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 45 நாட்களில் 40க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நேற்று ராமேசுவரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற ஜஸ்டின் என்பவரின் விசைப்படகில் இருந்த 5 பேரும், டேவிட் என்பவரின் நாட்டுப்படகில் இருந்த 9 பேரும் இலங்கை கடற்படையினரால் எல்லை மீறி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டனர். அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டன. மீனவர்கள் மீது தொடர்ச்சியான கைது நடவடிக்கைகள், இயற்கை சீற்றம் மற்றும் தாக்குதல்கள் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.














