தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்திற்குட்பட்ட ஆலம்பாடி என்ற கிராமத்தில் பல்லவர்கள் கால 2 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள வேடியப்பன் கோவிலில், புதைந்த நிலையில் இருந்த நடுகற்களை, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்தவர்கள் கள ஆய்வின் போது கண்டுபிடித்துள்ளனர்.
முதலாம் நடுகல்லில், வலது கையில் வாளும், இடது கையில் கேடயமும் கொண்டு, இடைக்கச்சை அணிந்து சண்டைக்கு ஆயத்தமாகும் நிலையில் வீரர் ஒருவரின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் 4ம் ஆட்சி ஆண்டில், இது நடப்பட்டதாகவும், காட்டி சாமி என்பவர் கீழ் வாழப்பாடி மாதவிண்ணனோடு ஆநிரைகளை மீட்டு பூசலில் ஈடுபட்டு புஞ்சி என்ற ஊரை ஆளும் ராமசாத்தன் என்பவர் இறந்து போனதை குறிப்பிடுவதாகவும், வட்டெழுத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நடுக்கல்லில், வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லும் கொண்டு வீரர் ஒருவர் போருக்கு ஆயத்தமாகும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. அதில், பல்லவ மன்னன் சிங்க விஷ்ணுவின் 11 வது ஆட்சி ஆண்டில் இந்த நடுகல் வெட்டப்பட்டதாகவும், வேணாட்டு புஞ்சி மல்ல நக்கன் என்பவர் புஞ்சியில் நடந்த பூசலில் ஆநிரைகளை மீட்டு அதன்பின் இறந்து போனதை குறிப்பிடுவதாகவும் அமைந்துள்ளது.