உக்ரைன் - ரஷ்யா போர் தீவிரமாக நடைபெற்று வரும் நேரத்தில், நேட்டோ உறுப்பு நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. அந்த வகையில், உக்ரைன் நாட்டிற்கு, இதுவரையில், 1550 கவச வாகனங்கள், 230 பீரங்கிகள் ஆகியவற்றை நேட்டோ உறுப்பினர்கள் அனுப்பியுள்ளனர். நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்ன்பர்க் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைனுக்கு ஆயுத தளவாடங்கள் வழங்குவதாக அளித்த வாக்குறுதியின் படி, 98% ஆயுதங்கள் வழங்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்.
ஆயுதங்கள் வழங்கியது மட்டுமின்றி, 30000 க்கும் மேற்பட்ட உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு, நேட்டோ உறுப்பினர்கள் போர் பயிற்சி வழங்கி உள்ளனர். நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு, தொடர்ந்து ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், “உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் ஆயுதங்கள் வழங்குவது, போருக்கான தீர்வாக இருக்காது. மாற்றாக கூடுதல் இழப்பை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளது.