சென்னை புத்தக காட்சியில் ரூ.16 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான 'பபாசி' சார்பில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் 46வது சென்னை புத்தக காட்சி இம்மாதம் 6ம் தேதி துவங்கியது. இதில் ஆயிரம் அரங்குகள் இடம் பெற்றன. தினமும் காலை 11:00 முதல் இரவு, 8:30 மணி வரை புத்தக விற்பனை 10 சதவீத தள்ளுபடியுடன் நடந்தது.
இதுகுறித்து, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் துணைத் தலைவர் மயிலவேலன் கூறுகையில், இந்த புத்தகக் காட்சிக்கு தமிழக அரசும், வாசகர்களும் நல்ல ஒத்துழைப்பை வழங்கினர். பொங்கல் பண்டிகை முடிந்தும் புத்தகக் காட்சி நடந்ததால் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கடந்த ஆண்டுகளில், கொரோனா தாக்கத்தால் விற்பனை பாதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்தனர். 16 கோடி ரூபாய்க்கு மேல் நுால்கள் விற்பனையாகின என்று அவர் கூறினார்.