மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் படாங் கலி என்ற சுற்றுலா தளம் உள்ளது. மலைப்பாங்கான இந்த பகுதியில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில், இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டபோது சம்பவ இடத்தில் 94 பேர் இருந்ததாக மலேசிய தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூறியுள்ளது. சுமார் 53 பேர் காயங்கள் இன்றி மீட்கப்பட்டுள்ள நிலையில், 7 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 17 பேரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதிகாலை 2.30 மணி அளவில் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், மீட்பு குழுவினர் விரைவாக சென்றுள்ளனர். கடும் இருளிலும் டார்ச் லைட் உதவியுடன் உடனடியாக அவர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, 400 க்கும் மேற்பட்டோர், மோப்பநாய் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.