நாட்டில் நிலவும் பணப்புழக்கத்தை வைத்து வங்கியின் ரூபாய் இருப்பு நிர்ணயிக்கப்படும். அந்த வகையில், இந்தியாவில் ரூபாய் நோட்டுப் புழக்கம் குறித்த அறிக்கை ஒன்றை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக, தீபாவளி பண்டிகை வாரத்தில் காகித ரூபாய் புழக்கம் குறைவாக பதிவாகி உள்ளது. முன்னதாக, கடந்த 2009 ஆம் ஆண்டு, பொருளாதார மந்த நிலை காரணமாக ரூபாய் நோட்டுப் புழக்கம் குறைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த வருடம் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளின் வளர்ச்சியால் காகித ரூபாய் நோட்டுப் புழக்கம் குறைந்துள்ளது. இது வரவேற்கத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2002 ஆம் ஆண்டு டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறைகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. அதன் பின்னர், இந்த வருடம் தான், தீபாவளி வாரத்தில் காகித பணம் புழக்கம் குறைவாக பதிவாகியுள்ளது. நடப்பு ஆண்டில், யுபிஐ பண பரிவர்த்தனைகளின் வளர்ச்சியால் காகித ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சில்லறை வணிகத்தில் 11 - 12% கட்டணங்கள் யுபிஐ அல்லது டிஜிட்டல் வாலட்டுகள் மூலம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2016ஆம் நிதி ஆண்டில், 0% ஆக இருந்த யுபிஐ பண பரிவர்த்தனை, 2022 ஆம் நிதி ஆண்டில், 16% ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில், கடந்த 2020 ஆம் ஆண்டு, 43800 கோடி ஆகவும், 2021 ஆம் ஆண்டு 44000 கோடி ஆகவும் காகித பணப்புழக்கம் பதிவானது. ஆனால், நடப்பு ஆண்டின் தீபாவளி சமயத்தில், 7600 கோடி ரூபாய் அளவில் மட்டுமே காகித பணப்புழக்கம் பதிவாகியுள்ளது. கடந்த 2016 ஆம் நிதியாண்டு, 88% ஆக இருந்த காகித பண பரிவர்த்தனை, 2022 ஆம் நிதி ஆண்டில் 20% ஆக சரிந்துள்ளது. மேலும், வரும் 2027-ம் நிதி ஆண்டில் 11.2% ஆக சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், டிஜிட்டல் பண பரிவர்த்தனை, 2016 ஆம் நிதி ஆண்டில் 11.3% ஆக இருந்தது. அது 2022 ஆம் நிதி ஆண்டில் 80.4% ஆக உயர்ந்துள்ளது. மேலும், வரும் 2027 ஆம் நிதி ஆண்டில் 88% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.