அனைத்து பாடத்திட்ட பள்ளிகளிலும் 2 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் தரக் கூடாது என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச் சுமையைக் குறைக்க வேண்டுமென எம்.புருஷோத்தமன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், சிபிஎஸ்இ மட்டுமின்றி மாநில பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் 2 ஆம் வகுப்பு வரை கண்டிப்பாக வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி துறை அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், சென்னை உயர் நீதிமன்றம் 2 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தர தடை விதித்துள்ள நிலையில் அதை முறையாக அமல்படுத்த வேண்டும்.
மேலும், பள்ளிகளில் பறக்கும் படையைக் கொண்டு ஆய்வு செய்து 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தராமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். ஆய்வுக்குப் பின் இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.