சோமாலியா நாட்டில் சனிக்கிழமை அன்று இரண்டு கார் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. அந்நாட்டின் கல்வித் துறை அமைச்சகம் செயல்படும் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில், சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டின் அதிபர் ஹசன் ஷேக் முகமது தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சோமாலியாவில் இயங்கி வரும் அல்-ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு காரணம் என கூறியுள்ளார்.
மேலும், அப்பாவி பொதுமக்கள் மீது இத்தகைய கொடூரமான தாக்குதல் நடத்தியதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு தக்க பதிலடி கொடுக்க போவதாகவும் பதிவிட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் அமைப்பு பொறுப்பேற்கவில்லை. ஆனால், அண்மையில் நிகழ்த்தப்பட்ட வேறு பல தாக்குதல்களுக்கு அந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்புக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலும் தடைகள் உள்ளன.
கடந்த 2017 ஆம் ஆண்டு, அக்டோபர் 14ஆம் தேதி, அதே பகுதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 500 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதனை நினைவுகூர்ந்த அதிபர், இதுபோன்ற அக்டோபர் மாதத் தாக்குதல்கள் முடிவுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் மூலம், சோமாலியாவில் பாதுகாப்பு குறித்த அச்சமும் கேள்வியும் எழுந்துள்ளன.