அஜர்பைஜானில் உள்ள எரிவாயு நிலையம் ஒன்றில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 290 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுகாதாரத்துறை இந்த தகவலை தெரிவித்துள்ளது.
வெடிவிபத்து நேர்ந்த பகுதியில் இருந்து 13 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதன்படி, இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், நாகோர்னோ-கராபாக் பகுதியில் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதன் பிறகு, அர்மேனியாவுக்கு பலரும் வெளியேறத் தொடங்கினர். அந்த சமயத்தில் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.














