வாகன எண்களை துல்லியமாக படம் பிடித்து அபராதம் விதிக்கும் வகையில் சென்னையில் மேலும் 200 அதிநவீன தானியங்கி ஏஎன்பிஆர் கேமராக்கள் நிறுவப்பட உள்ளன.
விபத்துகள், விபத்து உயிரிழப்புகள் மற்றும் வாகன நெரிசல்களை குறைக்க சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்கள், சீட் பெல்ட் அணியாமல்கார் ஓட்டுபவர்கள், நிறுத்த குறியீட்டை தாண்டி சாலையில் வாகனத்துடன் நிற்பவர்கள், எதிர் திசையில் வாகனத்தில்செல்பவர்கள், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டுபவர்கள், வாகன பந்தயம் உட்பட பல்வேறு வகையான போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் சென்னை முழுவதும் ஆங்காங்கே ஏஎன்பிஆர் (Automatic Number-Plate Recognition) என்றழைக்கப்படும் 200 அதிநவீன தானியங்கி கேமராக்கள் நிறுவப்பட உள்ளன. இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. இதுபோன்ற கேமராக்கள் 15 உள்ள நிலையில், தற்போது மேலும் அதிகரிக்கப்பட உள்ளது.