தமிழகத்தில் நில வழிகாட்டி மதிப்புகளை 200 சதவீதம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 2012ல் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு ஒட்டு மொத்தமாக சீரமைக்கப்பட்டது. இதில் காணப்பட்ட குறைபாடுகளை சரி செய்ய 2017ல் வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டது.
இதுகுறித்து சார் - பதிவாளர்கள் கூறுகையில், பதிவுத் துறையில் முறையாக, மாநில, மாவட்ட அளவில் கமிட்டி அமைத்து வருவாய் துறை ஆலோசனையுடன் வழிகாட்டி மதிப்புகளை உயர்த்துவது வழக்கமான செயலாகும். மேலும் தேவை அடிப்படையில், மதிப்புகளை உயர்த்தவும், குறைக்கவும், பதிவுத் துறை டி.ஐ.ஜி.,க்களுக்கு அதிகாரம் உள்ளது. இதை பயன்படுத்தி மாவட்ட வாரியாக உயர் மதிப்பு பத்திரங்கள் குறித்த தகவல்கள் திரட்டப்படுகின்றன.
இதை அடிப்டையாக கொண்டு உயர் மதிப்பை உறுதி செய்வதற்கான புதிய வகைப்பாடுகள் ஏற்படுத்தப்படுகின்றன. தற்போது அவை 200 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது.
உதாரணமாக, ஒரு கிராமத்தில் 1 ஏக்கர், 4 லட்சம் ரூபாய் என வழிகாட்டி மதிப்பில் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த நில உரிமையாளர், வங்கிக் கடன் பெறும் நோக்கத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு 1 ஏக்கர் கைமாறுவதாக பத்திரம் பதிவு செய்து இருப்பார். இதை அடிப்படையாக வைத்து, புதிய வகைப்பாட்டை உருவாக்கி அந்த பகுதியில் அனைத்து சொத்துக்களுக்கும் ஏக்கர், 10 லட்சம் ரூபாயாக வழிகாட்டி மதிப்பு மாற்றப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஒரு பதிவு மாவட்டத்துக்கு 100 இடங்கள் வீதம் வழிகாட்டி மதிப்புகள் உயர்த்தப்படுகின்றன. இந்த மதிப்புகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளன என்று அவர்கள் கூறினர்.