குஜராத்தில் ராணுவத்திற்கு போர் விமானங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத் தேர்தலுக்கான அறிவிப்பை விரைவில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதை அடுத்து, ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் மத்திய - மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வரும், 30 ஆம் தேதி 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ராணுவத்துக்கு விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த தொழிற்சாலையை டாடா - ஏர்பஸ் நிறுவனங்கள் அமைக்கின்றன.
இது குறித்து ராணுவத் துறைக்கான செயலாளர் அஜய் குமார் கூ றுகையில், இந்தியாவில் முதல் முறையாக தனியார் நிறுவனம் சார்பில் போர் விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, குஜராத் மாநிலத்தில் அமைய உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் விமானங்களை, போருக்கு மட்டுமல்லாமல் பயணியர் போக்குவரத்துக்கும் பயன்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.